காவேரிப்பட்டணம் அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பு: பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

Update: 2022-11-07 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வழிப்பாதை ஆக்கிரமிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது காந்திநகர். இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்ப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்கள் காந்திநகர் பகுதியில் உள்ள சாலை வழியாக பள்ளிக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் அந்தபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், லாரிகள் சாலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் கனரக வாகன போக்குவரத்தால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் நேற்று காலை காந்தி நகர் அருகே காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் மற்றும் காவேரிப்பட்டணம் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்