கேரள அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கேரள அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ெரியார்-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பம் வ.உ.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக-கேரள எல்லையை கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் செயலாளர் பொன்காட்சிகண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தலைவர் சலேத், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் ரவீந்திரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கதலைவர் ஈசன் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு அளவீடு என்ற பெயரில் தமிழக-கேரள எல்லையை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் முதல் நீலகிரி மாவட்டம் வரை உள்ள 15 தாலுகாக்கள், இடுக்கி மாவட்டம் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை உள்ளிட்ட தாலுகாக்களில் அளவீடு செய்வதற்கு முன்பு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.
மேலும் 822 கிலோ மீட்டர் தூரம் உள்ள தமிழக-கேரள எல்லையை அளவீடு செய்த பிறகு தான் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு அளவீடு பணியை தொடங்க வேண்டும். ஆனால் கேரள அரசு நடைமுறையை மீறி அளவீடு செய்வதால் தமிழக நிலங்களை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.