தர்மபுரி அருகே பரபரப்பு: ஏரிகளுக்கு தண்ணீர் விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-10-06 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே ஏரிகளுக்கு தண்ணீர் விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரிகளுக்கு தண்ணீர்

தரமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பல்வேறு ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறையினர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

கோரிக்கை

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கடகத்தூர் ஏரி, சோகத்தூர் ஏரி, தர்மபுரி ராமக்காள் ஏரிகளுக்கு வரத்தொடங்கியது. இதனால் இந்த ஏரிகள் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள், பயிர் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதனிடையே இந்த 3 ஏரிகளும் நிரம்பாமலேயே சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தங்களது பயிர்கள் கருகும் என்றும், 3 ஏரிகளும் முழுமையாக நிரம்பிய பிறகு மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சோகத்தூர், பூலாவரி, பழைய தர்மபுரி, கடகத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டி கூட்ரோடு பகுதியில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ராமாக்காள் ஏரி உள்ளிட்ட 3 ஏரிகளுக்கும் மீண்டும் தண்ணீர் திறந்து விடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

விவசாயிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், தற்போது நெல் பயிரிட்டு விவசாய பணிகளை தொடங்கி விட்டோம்.

ஏரிகள் நிரம்பாமல் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால், தங்களுடைய விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இந்த 3 ஏரிகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டம்

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, 3 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து 3 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்