ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது, பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் ஒரு சமுதாய மக்கள் பயன்படுத்தும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி அந்த நிலத்தை சுற்றி வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில், மாநில பொதுச்செயலாளர் விஸ்வைகுமார், மாவட்ட செயலாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தங்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் மனு கொடுத்தனர்.