கைத்தறி நெசவாளர் சங்க பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர் சங்க பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி,
செயற்கை பட்டு நூல் அனுமதி வழங்காததை கண்டித்து கைத்தறி நெசவாளர் சங்க பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
பரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு செயற்கை பட்டு நூல் அனுமதி வழங்காத காரணத்தால் சங்க உறுப்பினர்களுக்கும், நெசவாளர்களுக்கும் பாவு நூல் வழங்க முடியாமல் கைத்தறி தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு தடையின்றி கிடைக்க கைத்தறி துறை செயற்கை பட்டு நூல் கொள்முதல் செய்து கொள்வதற்கான அனுமதியை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க கோரி பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேஷன் சார்பாக எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெடரேஷன் தலைவர் சேஷய்யன் தலைமை தாங்கினார். பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். செயலாளர் ருக்மாங்கதன் வரவேற்றார். துணை தலைவர்கள் கோவிந்தன், விசுவநாதன், நாகநாதன், துணை செயலாளர்கள் நாகராஜன், முரளி, பாஸ்கரன், குப்புச்சாமி, நாகராஜன், குமார் உள்பட அனைத்து கூட்டுறவு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பொருளாளர் கணேஷ்பாபு நன்றி கூறினார்.
பேச்சுவார்த்தை
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது நூல் கொள்முதலுக்கான முதல் நடவடிக்கையாக நூல் விலை நிர்ணய குழு கூட்டம் வருகிற 17-ந் தேதி நடத்த கைத்தறி துறை அனுமதி வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தொடர்ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.