தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி பேசினார். பாரபட்சம் இல்லாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பங்கேற்பு என்ற பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்க கூடாது.
எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்க கூடாது. தமிழகத்தில் செயல்படும் 186 நம்பிக்கை மையங்களை மூடக்கூடாது. குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் நம்பிக்கை மையத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் திட்ட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.