சொத்து தகராறு: தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்
கொலை தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
சென்னை,
சென்னையை அடுத்த மாதவரம் அம்பேத்கர் நகர், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 33). இவருடைய தம்பி விக்னேஷ்குமார் (வயது 30). அண்ணன்-தம்பி இருவரும் ஆட்டோ டிரைவராக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான சொத்தை பிரித்துக்கொள்வதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அண்ணன்-தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தம்பி விக்னேஷ்குமாரை தாக்கியதுடன், கத்தியாலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ்குமார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்றதாக நரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.