கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்க திட்டம்
கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் ரெயில் சேவையை அதிகரிக்கும் போது பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தினமும் 300 மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டாலும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் நீடித்து வருகிறது.
வாசலில் நின்று மக்கள் பயணிக்கின்றனர். அலுவலகம் செல்லக்கூடிய ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலை செய்யக்கூடியவர்கள் அதிகளவு பயணம் செய்கின்றனர்.
தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் 80 கி.மீ வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் தாமதம் என்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
காலை, மாலை 'பீக்' நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. மேலும் தென்மாவட்டங்களில் இருந்து காலை நேரத்தில் சென்னை வரக்கூடிய ரெயில்களும் வருவதால் சில நேரங்களில் மின்சார ரெயில் சேவையில் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 3-வது பாதையில் ரெயில் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3-வது வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் வேகமாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடிகிறது. வேகம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள கால இடைவெளியில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் ரெயில் சேவையை அதிகரிக்கும் போது பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பயணிகள் நலச்சங்க உறுப்பினர் பாண்டியராஜா கூறும் போது, 'மின்சார ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். நெரிசலில் பயணம் செய்யும் நேரம் குறையும்.
மேலும் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே கூடுதலாக 3 அல்லது 4 ரெயில்களை காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் போதுமான அளவு ரெயில்கள் இயக்கப்படவில்லை' என்றார்.