1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம்

கூடலூர் வன கோட்டத்தில் காடுகள் பரப்பளவை அதிகரிக்க 1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2022-11-20 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் வன கோட்டத்தில் காடுகள் பரப்பளவை அதிகரிக்க 1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

1½ லட்சம் மரக்கன்றுகள்

தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வனத்துறை மூலம் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடலூர் வன கோட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு பசுமை தமிழகம் திட்டம் மற்றும் நபார்டு மூலம் 1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

தொடர்ந்து கோட்டத்துக்கு உட்பட்ட நாடுகாணி, சேரம்பாடி, பந்தலூர், பிதிர்காடு, ஓவேலி உள்ளிட்ட சரகங்களில் காடுகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கூடலூர் பள்ளிப்பாடி பகுதியில் 1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக நிலத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காடுகளின் பரப்பளவு

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வருடம் 30 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 1½ லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அகில், நெல்லி, நாவல், நீர்மருது, மூங்கில் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும்.

தொடர்ந்து அடுத்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் பொதுமக்களுக்கும் தேவையான மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வழங்கப்படும். அரசின் தொடர் நடவடிக்கையால் காடுகளின் பரப்பளவு மற்றும் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்