ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க தடை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2022-07-04 16:06 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த ஏரியின் மீன் பாசி குத்தகையை2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு மொரப்பூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை, மீனவ சங்க உறுப்பினர்கள் 6 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதனால் ஆலாபுரம், மெணசி கிராம மக்களுக்கும், மீன் பாசி குத்தகைதாரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதன்படி கிராம பொது நலனுக்காக 10 லட்சம் ரூபாய் செலுத்த முடிவு செய்யப்பட்டதின் பேரில் பணத்தை கிராமத்திற்கு மீன் பிடி குத்தகைதாரர்கள்கட்டினர்.

இந்த நிலையில் மீனவ சங்கத்தின் மூலம் அறிவிப்பு எதுவும் இன்றி மீன் பாசி குத்தகைதாரர்கள் 6 பேரை நீக்கம் செய்து, புதிதாக ரங்கநாதன் என்பவருக்கு இந்தாண்டு, மொரப்பூர் கூட்டுறவு சங்கம் மீன்பிடிக்க உரிமம் வழங்கி உள்ளது. இதனால் பழைய, புதிய மீன்பிடி குத்தகைதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அமைதி பேச்சுவார்த்தை பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சுப்பிரமணி தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுலகிருஷ்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனிச்சாமி மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோர் கலந்து ெகாண்டனர். மொரப்பூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் உறுப்பினர்களை சேர்த்தது, நீக்கியது மற்றும் 2 குழுக்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கியது குறித்து புகார்கள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில், கூட்டுறவு சங்க விதிகள் படி தர்மபுரி மீன்வளத்துறை துணை இயக்குனர் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து அரூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை ஆலாபுரம் ஏரியில் இருதரப்பினருக்கும் மீன் பிடிக்க தடை விதித்து தாசில்தார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்