சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்
பழனி அருகே விலையை உயர்த்தி வழங்கக்கோரி சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
தொப்பம்பட்டியில் ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை போல், அரசு சார்பில் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். மேலும் பால் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.