கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தயாரிப்பாளர் கைது

கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். வக்கீல்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.

Update: 2022-10-08 18:45 GMT

பொள்ளாச்சி

கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். வக்கீல்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.

மாணவி பலாத்காரம்

கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 31). சினிமா தயாரிப்பாளரான இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், சினிமாவில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பதாக கூறி பொள்ளாச்சிக்கு தன்னை பார்த்திபன் வரவழைத்தார். அங்கு நடிகைக்கான தேர்வு நடக்கும்போது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதால் கர்ப்பத்தை கலைத்துவிடும்படி கூறி கலைக்க வைத்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டு உத்தரவு

இதற்கிடையில் தயாரிப்பாளர் பார்த்திபன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் புகார் அளித்த பெண் 18 வயதிற்கு மேல்தான் சினிமாவில் நடிப்பதற்காக வந்தார் என்றும், அந்த இளம்பெண்ணுக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி அதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் பார்த்திபனை மறு அறிவிப்பு வரும் வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் இருந்த தயாரிப்பாளர் பார்த்திபனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை கைது செய்ய முயன்ற போது, பார்த்திபன் இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும், வழக்கின் விசாரணை நாளை (திங்கட்கிழமை) வர இருப்பதாகவும், அதுவரை தன்னை கைது செய்யக்கூடாது என உத்தரவு இருப்பதாகவும் கூறினார்.

பரபரப்பு

ஆனால் போலீசார் அவரை கைது செய்து பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த தயாரிப்பாளர் பார்த்திபனின் வக்கீல்கள் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் கைது செய்யக்கூடாது என உத்தரவு இருந்தும், கைது செய்து இருப்பது சட்டவிரோதம் என்றனர். அதன்பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி, தயாரிப்பாளர் பார்த்திபனை விடுவித்தார். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்