காலை சிற்றுண்டி மைய பொறுப்பாளர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை சிற்றுண்டி மைய பொறுப்பாளர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-05-21 12:44 GMT

கீழ்பென்னாத்தூர்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின்கீழ், வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கும் நாள் முதல் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

அதன்படி பொறுப்பாளர்களுக்கு சிற்றுண்டி எவ்வாறு சமைத்து வழங்குவது குறித்த பயிற்சி முகாம்கள் நடந்து வருகிறது.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 86 மையங்களில் மொத்தம் 258 பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவதற்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையதுசுலைமான் அறிவுரையின் பேரில், கீழ்பென்னாத்தூர் மகளிர் திட்ட வட்டார அலுவலகத்தில் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்க முகாம்கள் நடந்து வருகிறது.

பயிற்சிக்கு வட்டார இயக்க மேலாளர் சுகந்தி தலைமை தாங்கி காலை சிற்றுண்டி திட்டத்திற்கான 8 வகையான பதிவேடுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும், பொறுப்பாளர்கள் தூய்மையான முறையில் தினமும் காலையில் வந்து என்னென்ன சிற்றுண்டியை தயாரித்து வழங்க வேண்டும் என்பதை கையேடுகளில் குறிப்பிட்டுள்ள விவரப்படி ருசியான முறையில் தயார் செய்து காலை 8.30 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினார்.

அப்போது காலை சிற்றுண்டியை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை பயிற்றுனர்கள் திலகவதி, சத்யா, பேபி ஆகியோர் மைய பொறுப்பாளர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள், வட்டார வள பயிற்றுனர் சிவப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்