போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் கடந்த மாதம் 8-ந் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் கல்லூரி, மாணவ-மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், 2021-ம் ஆண்டில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களை பாராட்டி காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
இதில் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற முதுகலை முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி பிரீத்தாவுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாமாண்டு மாணவி அரபாத்க்கு 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், இளங்கலை மூன்றாமாண்டு வேதியியல் பிரிவு மாணவி மருதாம்பாளுக்கு 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற முதுகலை இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவி திலகவதிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், முதுகலை தமிழ் இலக்கியம் முதலாமாண்டு மாணவி உஷாதேவிக்கு 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி அபிநயாவுக்கு 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி காயத்ரிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு மாணவர் பூபாலனுக்கு 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், முதுகலை தமிழ் இரண்டாமாண்டு மாணவர் நிஷாந்த்க்கு 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2021-ம் ஆண்டில் தமிழில் சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதிய பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவியாளர் சுகன்யா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலக இளநிலை உதவியாளர் கலைநிதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ஜோதிவேல், உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய 4 அரசுப் பணியாளர்களுக்கும் காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.