தனியார் ஓட்டல் மீது நடவடிக்கை

தனியார் ஓட்டல் மீது நடவடிக்கை

Update: 2022-09-16 11:55 GMT

திருப்பூர்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு தலைவர் பவித்ராதேவி, செயலாளர் சரஸ்வதி, துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும், தமிழகத்திலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலும் மதுபோதையில் இருந்ததாக செய்திகள் வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது திருப்பூர் மாநகரில் மங்கலம் ரோட்டில் 'டுவின் பெல்ஸ்' என்ற ஓட்டல், ரெஸ்ட்டாரண்டில் இன்று (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு 'டிஜே நைட் பார்ட்டி' என்ற நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், இதில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவசமாக மது வகைகள் வழங்கப்படும் என்கிற விளம்பரம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் போதையால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதில் பெண்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோதாது என்று பெண்களையும் குடிப்பழக்கத்திற்கு ஈடுபடுத்துகிற மோசமான நடவடிக்கையாக உள்ளது. பொருளாதாரத்தில் வசதிபடைத்த பெண்கள் குடி என்ற பெயரில் போதைப்பொருட்களை அறிமுகம் செய்யும் முதல் முயற்சியே இது. திருப்பூர் வசதிபடைத்த நகரம் என்பதால் பெண்களை தங்கள் வலையில் விழ வைத்து மிரட்டி பணம் பறிக்கும் வாய்ப்புள்ளது.

ஒருமுறை பெண்கள், பெண் குழந்தைகள் இந்த மாயவலையில் சிக்கிக்கொண்டால் திரும்ப முடியாது. திருப்பூரில் முளைவிடும் முன்பே இதுபோன்ற போதை கலாசாரத்தை வேரறுப்பது நமது கடமையாகும். எதிர்காலத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்