தனியார் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சினையால் தனியார் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-15 18:54 GMT

காதல் திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா, தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சிவா (வயது 32). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சிவா பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் உள்ள அன்பு நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சிவா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கு முன்புவரை வேலைபார்த்துள்ளார். அதன்பிறகு தனது வீட்டிற்கு அருகே மளிகை கடைகளுக்கு அனைத்து பொருட்களும் வினியோகம் செய்யும் தனியார் ஏஜென்சிஸ் வைத்து நடத்தி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனிடையை சிவா பலரிடம் கடன் வாங்கி அதனை சுழற்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால், வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதில் மனஉளைச்சலில் இருந்த சிவா நேற்று முன்தினம் இரவு பண விஷயமாக வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளிருந்தவாறே வெளிப்புறம் பூட்டு போடும் வசதி இருந்ததால், சிவா வெளிப்புறம் தாளிட்டுக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் ரம்யா, சிவாவிற்கு செல்போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் சிவா வீட்டிற்கு வருவதாக ரம்யாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் நள்ளிரவு கடந்தும் வீட்டிற்கு வரவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை ஏஜென்சியில் பணிபுரியும் வாசுகி என்பவர் ஏஜென்சியை திறந்து பார்த்தபோது, சிவா, கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிவா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு கடன்சுமை அதிகமாக இருப்பதால், இந்தமுடிவை எடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்