தனியார் நிறுவன ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லையில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-04 20:14 GMT

நெல்லையில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பலவேசம். இவருடைய மகன் மாயாண்டி (வயது 36). தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

குறுக்குத்துறையை கடந்து கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அவர்கள் திடீரென மாயாண்டியை அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே மாயாண்டி அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள வயல் பகுதிக்குள் இறங்கி ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் மாயாண்டியை விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

போலீஸ் மோப்ப நாய்

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாயாண்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

திருட்டு பிரச்சினை

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மேலநத்தத்தில் ஒரு வீட்டில் கிரைண்டர் திருட்டு போனது தொடர்பாக மாயாண்டி அதே ஊரைச் சேர்ந்த சிலரை கண்டித்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு

கொலை செய்யப்பட்ட மாயாண்டிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த சம்பவத்தையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் மேலநத்தம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்