பிரதமர் தெரிவித்த யோசனை: 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா? ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து
பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே போலீஸ் சீருடை
மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', 'ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
வேறுபாடு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தேனியை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
செயல்முறையில் புதிய மாற்றங்கள்
தேனியை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயன்:- நாடு முழுவதும் ஒரே போலீஸ் சீருடை திட்டம் கொண்டு வர வேண்டும் என்றால், தமிழக போலீஸ் துறையின் காக்கி சீருடை தான் நாடு முழுவதும் அமல்படுத்த கம்பீரமாகவும், பொருத்தமாகவும் இருக்கும். தமிழக போலீஸ் துறையில் வழங்கும் காக்கி சீருடையில் தரம் குறைவாக இருப்பதால் பலரும் வெளிநிறுவன தயாரிப்புகளான காக்கி சீருடையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால், தமிழகத்தில் வெவ்வேறு காக்கி சீருடையில் போலீசார் பணியாற்றுவதை பார்க்க முடியும்.
அரசு வழங்கும் காக்கியை தரமாக கொடுத்தால் நல்லது. என்னைப் பொறுத்தவைரை சீருடை மாற்றத்தை விடவும், தமிழகம் உள்பட நாடு முழுவதும் செயல்முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மகளிர் போலீஸ் பிரிவு, ஆயுதப்படை, உளவுப்பிரிவு ஆகிய முக்கிய பிரிவுகளை பலப்படுத்த வேண்டும். பொதுமக்களுடன் நல்லுறவு உருவாக்க தனியாக சிறப்பு பிரிவு தொடங்க வேண்டும். அது போலீஸ் துறையின் அனைத்து பிரிவுக்கும் பலம் சேர்க்கும்.
தேவையற்றது
தேனியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்:- ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை என்பது தேவையற்றது. தற்போது இருப்பது போல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருப்பது தான் நன்றாக இருக்கும். நாட்டில் வெப்பமான பகுதி, குளிர்பிரதேசம், மிதமான வெட்பநிலை என வெவ்வேறு தட்பவெட்ப சூழல் உள்ளது. அனைத்து இடங்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை சாத்தியமற்றது. தமிழக போலீஸ் துறையில் கூட ஊட்டியில் பணியாற்றும் போலீசாருக்கு சீருடையில் வேறுபாடு உள்ளது.
அதே நேரத்தில் தமிழக போலீஸ் துறையில் அரசு தரப்பில் வழங்கப்படும் காக்கி சீருடை துணியை தரமான முறையில் வழங்க வேண்டும். தற்போது வழங்கும் சீருடை எளிதில் கசங்கி விடுவதோடு, வெயிலில் நின்று பணியாற்றும் போது வியர்வை ஆடையில் பட்டு, உப்பு படிந்து காட்சி அளிக்கும். இதனால், பலரும் அரசு வழங்கும் சீருடையை ஆய்வு நாட்களில் மட்டுமே அணிந்து கொண்டு மற்ற நாட்களுக்கு விலைக்கு வாங்கி பிரபல நிறுவன தயாரிப்பு சீருடைகளை அணிகின்றனர்.
நல்ல விஷயம்
பெரியகுளத்தை சேர்ந்த வக்கீல் டிம்பிள் சிவபிரியா:- நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை கொண்டு வருது நல்ல விஷயம் தான். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமா? என பார்க்க வேண்டும். தற்போது இருமாநில எல்லையில் பணியில் இருக்கும் போலீசாரை எந்தெந்த மாநிலம் என்று எளிதில் அடையாளம் காண முடிகிறது. ஒரே சீருடை என்றால் எந்த மாநிலம் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
ஒரே நிறத்தில் சீருடை இருந்தாலும், அந்தந்த மாநிலத்தை அடையாளப்படுத்தும் வகையிலும், அதை மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான அம்சங்கள் இருக்க வேண்டும். அதேநேரத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது, இப்போதைக்கு சீருடையை மாற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?. நிர்வாக ரீதியான சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தலாம்.
மற்றவர்களுக்கு மாற்றலாம்
உத்தமபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:- போலீஸ் துறை, ஆட்டோ, பஸ் போன்ற வாகன டிரைவர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், காவலாளிகள் போன்றவர்களுக்கு காக்கி சீருடை வழங்கப்படுகிறது. போலீசாருக்கு காக்கி என்பது தான் கம்பீரம். எனவே, மற்றவர்களுக்கு காக்கிக்கு மாற்றாக வேறு நிறத்தில் சீருடையை மாற்றலாம். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே சீருடை என்பது சாத்தியமற்றது.
நாடு முழுவதும் ஒரே சீருடை என்றால் எதாவது ஒரு பகுதியில் ஒரு போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டால், அது சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களுடன் வதந்தியாக பரவினால் பல மாநிலங்களிலும் போலீசார் தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். தற்போது அதுபோன்ற மனித உரிமை மீறல் நடந்தால் சீருடையை பார்த்து எந்த மாநிலம் என்று கண்டுபிடித்து விட முடிகிறது. ஆனால், ஒரே சீருடை என்றால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.