இந்தியாவில் ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார்; அண்ணாமலை பேச்சு

இந்தியாவில் ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார் என்று கூடங்குளம் அருகே நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

Update: 2022-06-05 20:35 GMT

வடக்கன்குளம்:

இந்தியாவில் ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார் என்று கூடங்குளம் அருகே நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பண்ணையூரில் பிரதமர் மோடி ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. யானை, மாலை அணிவித்து வரவேற்றது. பின்னர் அவர் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்து ஒரு பொதுவான, மக்களுக்கான ஆட்சியை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள், ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்துள்ளது. 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகளை மத்திய அரசு உருவாக்கி கொடுத்துள்ளது.

3-வது முறை

22 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் 14 ஆண்டு முதல்-அமைச்சர், 8 ஆண்டுகள் பிரதமராக இருப்பவர் மோடி. உலகத்தில் இதுபோல் யாரும் ஆட்சியில் மக்கள் செல்வாக்குடன் இருந்தது இல்லை. 2024-ல் பா.ஜனதா சார்பில் 400 எம்.பிக்கள் வெற்றி பெற வேண்டும். அதில் 25 பேர் தமிழகத்தை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள். மோடி 3-வது முறை ஆட்சி அமைப்பார்.

மத்தியில் 8 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளில் ஒரு மந்திரி ஊழல் செய்தார் என்று சொல்லமுடியாத அளவிற்கு மோடி நேர்மையை அளவுகோலாக வைத்து செயல்படுகிறார்.

ஊழலை தட்டிக்கேட்கும்

24 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான பொருட்கள் வழங்க தமிழக அரசு பெட்டகம் வழங்குகிறது. இதில் உள்ள பவுடரில் ஊழல் செய்துள்ளார்கள். இந்த பவுடரில் ஊழல் செய்தவர்கள் தான் பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தவர்கள். மின்சாரமாக இருந்தாலும் ஊழல் செய்து காட்டுவேன் என அமைச்சர் கிளம்பி உள்ளார்.

கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். ஊழலை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜனதா மாறியுள்ளது.

திராவிட மாடல்

திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று முதல்-அமைச்சருக்கே தெரியவில்லை. ஏனென்றால் திராவிட மாடல் அரசு என்று ஒன்றுமில்லை. தமிழக மக்கள் `நீட்' தேர்வை ஏற்றுக்கொண்டதால் தான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர்.. அறவழியில் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். வரும் காலங்களில் இந்தியாவிற்கு வெளிநாட்டவர்கள் வேலை தேடி வருவார்கள்.

தமிழகத்தில் லூலு மால் அமைய பா.ஜனதா ஒரு போதும் விடாது. இந்தியாவில் ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார்.

முறையில்லாத குவாரி

முறையில்லாத குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது சட்ட வல்லுனர்கள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அரசு இதனை எச்சரிக்கையாக எடுத்து செயல்பட வேண்டும்.

2024-ம் ஆண்டு 25 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் எதிரியாக பா.ஜனதா இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதாவில் இணைந்தனர்

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும், விவசாயிகளுக்கு மாடு-கன்றும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

கூட்டத்தில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி, மாநில செயலாளர்கள் வினோத் செல்வம், மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவர் உமாபாரதி, மாவட்ட பொறுப்பாளர் நீல முரளி யாதவ், அய்யாவழி சிவசந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, தொழில்நுட்பப் பிரிவு முத்து, ஊடகப்பிரிவு செல்வகுமார், ஆவரைகுளம் நரேந்திர பாலாஜி, ஆவரைகுளம் சுரேஷ் மார்த்தாண்டம், கூடங்குளம் கேசவன், ராதாபுரம் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்