முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்
கோவை
அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
கவர்னருக்கு உரிைம இருக்கிறதா?
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு செல்வதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசின் அமைச்சரை நீக்க கவர்னருக்கு உரிமை இருக்கிறதா? என்பதில் பா.ஜ.க. தலையிட விரும்பவில்லை.
1971-79 காலக்கட்டத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோதுமை வாங்கியதில் சட்டவிரோதமாக லாபம் பெற்றதாக விவகாரம் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டுக்கு சென்ற போது அப்போதைய நீதிபதி பசில் அலி என்பவர் இது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கு என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இரட்டை வேடம்
அதே நேரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயங்கினால் கவா்னர் நீக்க வலியுறுத்துகிறேன் என்று கூறி இருந்தார்.
ஆனால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் இது அரசியல் வரம்புக்கு எதிரானது என்று கூறுகிறார். ஆகவே இதில் முதல்-அமைச்சரே நடவடிக்கை எடுத்து இருக்கலாம். கவர்னர் வரை சென்று இருக்க வேண்டாம். அமைச்சர் பதவி நீக்க விவகாரத்தில் முதல்-அமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார்.
99 சதவீதம் ஊழல் குற்றச்சாட்டு
கவர்னர் எந்த முடிவு எடுத்தாலும் அது சட்டத்துக்கு உட்பட்டு தான் இருக்கும். அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கிய அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை. இந்திய தலைமை சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்காக அனுப்பி இருக்கிறார். அதுவரை பொறுத்து இருப்போம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் 99 சதவீதம் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. கவர்னர் அனைத்து அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவியில் இருப்பதால் செல்தில்பாலாஜியை மாநில அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. மேலும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் தயங்குகிறது என்று தான் கவர்னர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். செந்தில்பாலாஜி தம்பி தலைமறைவாக உள்ளார். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது.
சிதம்பரம் கோவில் விவகாரம்
புதிதாக பொறுப்பேற்க உள்ள தலைமை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேர்மையாக செயல்பட வேண்டும். கல் குவாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. சிதம்பரம் கோவிலை அரசு கட்டுபடுத்த நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி செயல்படுகிறது. தீட்சிதர்களுக்கு மாநில அரசு தொந்தரவு கொடுக்க வேண்டாம். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே போராட தயங்கமாட்டேன்.
வருகிற 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்க உள்ளேன். இதனை உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்கிற கேள்விக்கு நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன் என்றார்.