விழுப்புரத்தில்தொடக்கப்பள்ளி சமையலர் தூக்கிட்டு தற்கொலைபோலீஸ் நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகை

விழுப்புரத்தில் தொடக்கப்பள்ளி பெண் சமையலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-02 18:45 GMT


விழுப்புரம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சித்ரா (வயது 29). இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு சுவேதாஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4) என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுபற்றி அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை ஆசிரியர் மீது புகார்

இந்நிலையில், சித்ரா சமையலராக பணி செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பணியின் போது தகாத வார்த்தையால் திட்டி, மாணவர்கள் முன்பு அவரை அவமானப்படுத்தி உள்ளார். இதனால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முற்றுகை

இந்நிலையில் சித்ராவின் குடும்பத்தினர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், நாங்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் சித்ராவின் உடலை வாங்கிக்கொள்ளுமாறு எங்களை வற்புறுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் தங்களை மிரட்டி வருவதாகவும் கூறினர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்தன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுாவர்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான், சித்ராவின் உடலை வாங்குவோம்.

உடலை வாங்க மறுப்பு

இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் வரைக்கும் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 3 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்