பாதிரியாரின் உதவியாளருக்கு 8 ஆண்டு ஜெயில்

இளம்பெண்ணை காரில் கடத்திய வழக்கில் பாதிரியாரின் உதவியாளருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-09-22 18:45 GMT

நாகர்கோவில், 

இளம்பெண்ணை காரில் கடத்திய வழக்கில் பாதிரியாரின் உதவியாளருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாதிரியாரின் உதவியாளர்

கேரள மாநிலம் நெடுமங்காடு காருவிளாகுவீடு பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கிறிஸ்தவ முறைப்படி திருமணத்திற்கு முன்பாக திருமண ஆலோசனை வகுப்பில் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக அவர் நெய்யாற்றின்கரையில் பிஷப் ஹவுசில் உள்ள ஆலோசனை வகுப்பில் பங்கேற்க முடிவு செய்திருந்தார்.

இந்தநிலையில் திருவனந்தபுரம் ஆலங்கோடு பாதிரியாரின் உதவியாளரான நெடுமங்காடு மொட்டைகாவு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பவர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு 13.5.2017 அன்று காரில் சென்றுள்ளார். பின்னர் ராஜேஷ், அந்த பெண்ணை நெய்யாற்றின்கரைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு இடம் தெரியாததால் ராஜேஷின் காரில் அவர் சென்றுள்ளார்.

8 ஆண்டு சிறை

ஆனால் நெய்யாற்றின்கரைக்கு அழைத்துச் செல்லாமல் அவர் குமரி மாவட்டம் திற்பரப்புக்கு காரில் கடத்தி சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துள்ளார். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என சுதாரித்துக் கொண்ட அந்த பெண் திடீரென சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர். அப்போது அறையில் இருந்து தப்பிக்க முயன்ற ராஜேஷை பொதுமக்கள் மடக்கி பிடித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. மொத்தம் 10 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், பெண்ணை கடத்திய ராஜேஷிற்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்