இந்த ஆண்டு நெல்லுக்கு விலை அதிகரிப்பு
இந்த ஆண்டு நெல்லுக்கு விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
இந்த ஆண்டு நெல்லுக்கு விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போய்விட்டதால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம்பாதிக்கப்பட்டு விட்டது.. அதே வேளையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால் ராமநாதபுரம் அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு வைகை தண்ணீரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை, காவனூர், பாப்பாக்குடி, ஐயர்மடம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதனால் நெற் பயிர்கள் நன்கு விளைந்துள்ளது. தற்போது அந்த கிராமப் பகுதிகளில் எந்திரம் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி நடக்கிறது. அறுவடையான நெற்கதிர்களை உலர வைத்து விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்று வருகின்றனர்.
விலை அதிகரிப்பு
இது குறித்து பாப்பாக்குடி மற்றும் சூரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது:-
மாவட்டத்தில் பல இடங்களில் சரி வர மழை பெய்யாததால் நெற்பயிர்கள் கருகி விட்டன. ஆனால் ராமநாதபுரம் சுற்றி உள்ள பல கண்மாய்களில் வைகை தண்ணீர் கொண்டு நிரப்பப்பட்டதால் அதை நம்பி இருந்த விவசாயிகள் மட்டும் தப்பித்து உள்ளனர். தற்போது அந்த பகுதியில் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல்லுக்கு நல்ல விலையும் கிடைத்துள்ளது.
66 கிலோ எடை கொண்ட டீலக்ஸ் ரக நெல் மூடை கடந்த ஆண்டு ரூ.1050-க்கு மட்டுமே விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.1300 வரை விலை போகின்றது. ஆர்.என்.ஆர்.ரக நெல்மூடை ரூ.1450-க்கும், சோதிமட்டை ரக நெல் மூடை ரூ.1600 வரையிலும் விலை போகின்றது.
கடந்த ஆண்டை காட்டிலும் அனைத்து ரக நெல் மூடைகளும் இந்த ஆண்டு நல்ல விலைக்கு தான் போகின்றன. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி, சூரங்கோட்டை, ஐயர்மடம், காவனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடை செய்து விவசாயிகள் வைத்துள்ள நெல் மூடைகளை வியாபாரிகள் நேரடியாகவே வந்து வாங்கி செல்கின்றனர். இந்த நெல்மூடைகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.