நெல்லையில் மழைநீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-மேயர் பி.எம்.சரவணன் பேச்சு

நெல்லையில் மழைநீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசினார்.

Update: 2022-10-12 19:26 GMT

நெல்லையில் மழைநீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசினார்.

ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், ''மாநகர பகுதி முழுவதும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மழைநீர் தேங்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் உடனடியாக அதனை செய்து தர வேண்டும். பருவமழை காலங்களில் மக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநகராட்சி பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்'' என்றார்.

நிவாரண பணிகள்

ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

கடந்த காலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கவுன்சிலர்கள் முன்னிலையில் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் ஆலோசனையோடு தன்னார்வலர்கள், சமூகஆர்வலர்கள் செல்போன் எண்களை பெற்று வெள்ளம் பாதிக்கும் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்க வேண்டும்.

டெங்கு ஒழிப்பு களப்பணியாளர் மூலம் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து இளநிலை அல்லது உதவி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த பகுதியில் வசிக்கின்ற மக்களை பாதுகாப்பு இடத்தில் தங்க வைக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்கால நிவாரண தளவாடப் பொருட்கள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த உபகரணங்களுடன் மழைக்கால நிவாரண பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இளநிலை உதவி பொறியாளர் உதவியுடன் மரம் அறுக்கும் எந்திரங்கள் பயன்படுத்த பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். வெள்ள நிவாரண முகாம்களில் சாவிகளை பெறுவதற்கு தொடர்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். மின்சார வசதி, தண்ணீர் வசதி விவரங்களை அறிந்து கொண்டு நடவடிக்கைகளில் உடனுக்குடன் ஈடுபட வேண்டும். வெள்ள நிவாரண பணிகளில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின் ராமசாமி, பைஜூ, உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கீர் பாட்ஷா, வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்