திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்துவீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபருக்கு தர்மஅடிபுதுப்பேட்டை அருகே பரபரப்பு

புதுப்பேட்டை அருகே திருமண அழைப்பிதழ் வைப்பது போல் நடித்து வீட்டில் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-23 18:45 GMT

புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மின்னல்கன்னி (வயது 60). இவருடைய மகன் சுபாஷ்சந்திர போஸ்(40). இவருடைய மனைவி அனிதா.

கண்ணன் இறந்து விட்டதால், மின்னல்கன்னி தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோசும், அனிதாவும் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் மின்னல்கன்னி மட்டும் தனியாக இருந்தார்.

திருட முயற்சி

இதை நோட்டமிட்ட 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக வந்திருப்பதாக கூறி, மின்னல் கன்னியின் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், தாகமாக இருக்கிறது, குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து மின்னல்கன்னி, வீட்டின் சமையல் அறையில் தண்ணீர் எடுக்க சென்றார்.

அப்போது அந்த வாலிபர் திடீரென வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்து, அங்கிருந்த அனிதாவின் கைப்பையை எடுத்து அதில் உள்ள பொருட்களை திருட முயன்றார்.

தர்ம அடி

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மின்னல்கன்னி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதில் சுதாரித்துக்கொண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து, பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அந்த வாலிபரை புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய கருவாச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் அமரன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அமரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்