நகை வாங்குவதுபோல் நடித்து2½ பவுன் வளையல்கள் அபேஸ்; மாற்றுத்திறனாளி பெண் கைது

நெல்லை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2½ பவுன் வளையல்களை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-04 19:33 GMT

நெல்லை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2½ பவுன் வளையல்களை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி பெண் கைது செய்யப்பட்டார்.

வளையல்கள் திருட்டு

நெல்லை வண்ணார்பேட்டையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேலாளராக மகேஷ் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2-ந்தேதி கடைைய அடைக்கும் முன்பு நகைகள் இருப்பை சரிபார்த்தார். அப்போது 2½ பவுன் தங்க வளையல்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் மாலையில் கடைக்கு வந்ததும், அவர் வளையல்களை வாங்குவது போல் நடித்து தனது கைகளில் மாட்டிக்கொண்டு சென்றதும் பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து நகைக்கடை மேலாளர் மகேஷ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளில் உள்ள பெண்ணின் படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.

அப்போது வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் ஈரோடு ஈ.பி.பி. நகரை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சந்தியா என்ற சிஸ்லி ரோஸ்னி (39) என்பதும், அவர் பர்தா அணிந்து வந்து நகைக்கடையில் வளையல்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அவரிடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காண்பித்து போலீசார் உறுதி செய்தனர்.

கைது

இதையடுத்து அவரை கைது செய்து, தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பர்தா அணிந்து வந்த பெண் தங்க வளையல்களை திருடி சென்றார். இதுகுறித்தும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவத்திலும் சந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்