வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார். மேலும் ஊட்டச்சத்து உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டார்.

Update: 2023-08-05 19:45 GMT

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார். மேலும் ஊட்டச்சத்து உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டார்.

ஜனாதிபதி வருகை

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு நேற்று வருகை தந்தார். இதற்காக அவர் காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வந்தார். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு மாலை 3.45 மணிக்கு வந்தார்.

தமிழகம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி காரில் சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் புடைசூழ 7 கி.மீ தொலைவில் உள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு 4 மணிக்கு வருகை தந்தார். அங்கு ஜனாதிபதியை தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, தலைமை வன உயிரின பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி, கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

யானைகளுக்கு கரும்புகள் வழங்கினார்

இதைத்தொடர்ந்து முகாமில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு யானைகள் பிளிறியவாறு தும்பிக்கையை உயர்த்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்றன. பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பாராட்டினார். இதையடுத்து முதுமலை முகாமில் காலை, மாலை வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டார்.

அதில் சேர்க்கப்படும் சிறுதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட உணவு தயாரிக்கும் முறையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரகு, பொம்மி, காமாட்சி, கிருஷ்ணா, சந்தோஷ், பாமா ஆகிய 6 வளர்ப்பு யானைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார். பின்னர் யானைகளை பராமரிக்கும் முறைகளை பாகன்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உலகளாவிய அங்கீகாரம்

முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 28 பாகன்கள், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 10 பாகன்களை ஜனாதிபதி சந்தித்து பேசினார். அப்போது பாகன்கள் தேவராஜ், கிரிமாறன், சுரேஷ், விக்ரம் ஆகியோரிடம் கலந்துரையாடினார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது கூறியதாவது:-

ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் தமிழக வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் யானைகள் பராமரிப்பு மேலாண்மைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து இருப்பது பெருமைக்குரியது. நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளை பாதுகாப்பது நமது பொறுப்பு. ஆசியாவிலேயே யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் வகையில், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பழங்குடியினரின் முக்கிய பங்கு

இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அடிப்படை வசதிகளை வழங்குவதும் மிகவும் முக்கியம். தெப்பக்காடு முகாமை நிர்வகிப்பதற்கு பெட்ட குறும்பர், காட்டு நாயக்கர், மலசர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாகன்கள் அனைவருக்கும் இனிப்புகள், சால்வைகள் அடங்கிய அன்பளிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். முதுமலையில் ஜனாதிபதி 45 நிமிடம் இருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு ஜனாதிபதி மாலை 4.45 மணிக்கு முதுமலை தெப்பக்காட்டில் இருந்து காரில் மசினகுடிக்கு புறப்பட்டார். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மசினகுடி பஜாரை அடைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்த ஜனாதிபதி திரவுபதி முர்மு காரில் இருந்து இறங்கினார்.

உற்சாக வரவேற்பு

தங்களை பார்க்க காரை விட்டு இறங்கிய ஜனாதிபதியை பார்த்த பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜனாதிபதி சிரித்த முகத்துடன் பொதுமக்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார். மேலும் சிறுமி ஒருவர் ஜனாதிபதிக்கு புத்தகம் வழங்கினார். அதன் பிறகு அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து 5.20 மணிக்கு மசினகுடியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடி, முதுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மசினகுடி-தெப்பக்காடு சாலையில் பாதுகாப்பு கருதி 5½ மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்