கும்பாபிஷேகத்துக்கு பூர்வாங்க பணிகள்:மீனாட்சி அம்மன் கோவில் பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜை- 3-ந் தேதி தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜை வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-08-30 20:50 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜை வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிைலயில் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே மண்டபம் மற்றும் கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றார். மேலும் இந்த திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

பாலாலய பூஜை

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. மேலும் கும்பாபிஷேக பணிக்காக திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவிலில் உள்ள கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 9 நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் என 5 கோபுரங்களுக்கு வருகிற 4-ந் தேதி பாலாலயம் நடக்கிறது.

இதற்காக வருகிற 3-ந் தேதி காலை 8.30 மணியில் இருந்து 11 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரையிலும் முதல் மற்றும் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 4-ந் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரையில் 3-ம் கால பூஜைகள் நடைபெறும். அது முடிந்த பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பாலாலய பூஜை நடைபெறும்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளதால் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இறைவன் அருளை பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்