மழைக்காலம் நெருங்குவதால் கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

மழைக்காலம் நெருங்குவதால் கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-08-16 19:01 GMT

நாமக்கல்:

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 20 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.

ஈக்கள் கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் பொதுவாக மழைக்காலங்களில் மழையும், இடையே வெயிலும் நிலவுவதால், ஈக்களின் பெருக்கத்திற்கு மிகவும் உகந்த சூழலாக இருக்கும். தற்போது மழைக்காலம் நெருங்குவதால் ஈக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, கோழி மற்றும் கால்நடைப்பண்ணைகளில் அதிக தொல்லையை ஏற்படுத்தும். எனவே ஈக்களை கட்டுப்படுத்த பண்ணையாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பண்ணை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் ஜூலை முதல் அக்டோபர் மாதங்கள் அல்லது பருவமழை தொடங்கியவுடன் உள்ள காலமானது இனவிருத்தி காலம் ஆகும். ஆகையால் இந்த காலங்களில் கூடுதலாக அடர்தீவனம் அளித்தால் அதிக எண்ணிக்கையிலான ஆடுகள் பருவத்திற்கு வந்து இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, அதிக அளவிலான குட்டிகள் ஈன வாய்ப்பு உள்ளது. மேலும் குட்டிகளின் பிறப்பு எடை சீராக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்