பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

Update: 2023-06-25 21:05 GMT

காட்டுப்புத்தூர்:பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தொட்டியம் வட்டம், காட்டுப்புத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி ரக்ஷாகர சுதர்சன பூர்ணாகுதி ஹோமமும், மறுநாள் கோபூஜையும் நடத்தப்பட்டது. ேமலும் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதையடுத்து அவை யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடந்த 23-ந் தேதி ஸ்ரீராமசமுத்திரம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து அப்பகுதி பக்தர்களால் எடுத்து வரப்பட்ட புனித நீர் மற்றும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் வைத்து ஹோமம், வாஸ்து சாந்தி என இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புண்ணியாக வாஜனம், மகாசாந்தி ஹோமம், பிரதான ஹோமம் என 3 கால பூஜையும், நேற்று யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி வந்து மூலஸ்தான கோபுர கலசம், பத்மாவதி தாயார் கோபுர கலசம், சக்கரத்தாழ்வார் கோவில் கோபுர கலசம் மற்றும் சால கோபுர கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து மூலவருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் காட்டுப்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமாேனார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விழாவில் காட்டுப்புத்தூர் ஜமீன் குடும்பத்தினர், காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ., தொழிலதிபர் அருண் நேரு, காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, இந்து சமய அறநிலையத்துறை தொட்டியம் பகுதி ஆய்வாளர் ஆனந்தி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் சுதா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்