சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர், காசி விஸ்வநாதர், அரசு நிலையிட்டான் விநாயகர் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி சிவலிங்கம், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் செந்துறையில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, பசு, கன்றுக்குட்டி வரவழைக்கப்பட்டு உமாபதி குருக்கள் தலைமையில் கோமாதா பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்று, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காளை வாகனத்தில் பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் பிரகார வலம் வந்தார். இதில் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.