மின் இணைப்பு பெறுவதில் நடைமுறை சிக்கல்

புதிய வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-07-10 20:45 GMT

பொள்ளாச்சி

புதிய வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது பொள்ளாச்சி என்ஜினீயர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

3 வீடுகள் கொண்ட கட்டிடங்கள் அல்லது 8 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள், வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு கடுமையான நடைமுறை சிக்கல் உள்ளது. ஒரேயொரு மின் இணைப்பை பல கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துவதால் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

சட்ட திருத்தம்

கட்டிடம் கட்டி முடிக்கும் தருவாயில் இந்த பிரச்சினை நிலவுவதால், பணி முடிவு பெறாமல் கிடக்கிறது. அதை அளந்து வரி விதிக்கும் உள்ளாட்சி துறைகள் கட்டிட முடிவு சான்று கொடுப்பதில்லை. இதனால் மின் இணைப்பு பெற முடியவில்லை. 8 வீடுகள் கொண்ட கட்டிடங்கள் வரை முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம். வணிக கட்டிடங்களுக்கு 5 ஆயிரம் சதுர அடி வரை முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம் என சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மது விற்பனை

தி.மு.க. கவுன்சிலர் சரிதா கொடுத்த மனுவில், தன்னாச்சியப்பன் கோவில் வீதி மற்றும் முகமது நகர் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இங்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் மதுப்பிரியர்கள் வந்து மது வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இதுகுறித்து கேட்டால் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் அனுமதி பெற்று நடத்துகிறோம் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பாலம் அமைக்க வேண்டும்

கோலார்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், பொள்ளாச்சி-திண்டுக்கல் சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கோலார்பட்டி இரண்டாக பிரிந்து உள்ளது. அங்கு பாதை உள்ள இடத்தின் அருகில் பஸ் நிறுத்தம் இருக்கிறது. இது இடையூறாக உள்ளது. எனவே பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில், அங்கு செட்டிபாளையம் சாலையின் நேராக சிறு பாலம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்