ராமநாதபுரத்தில் எய்ம்ஸ், அரசு மருத்துவ கல்லூரிகள் இருளில் மூழ்கின
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் மின்னல் தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு எய்ம்ஸ் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகள் இருளில் மூழ்கின.
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் மின்னல் தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு எய்ம்ஸ் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகள் இருளில் மூழ்கின.
பலத்த மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் பலமாகவும், பல இடங்களில் மிதமானதாகவும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் எய்ம்ஸ் கல்லூரி வளாகத்தில் இருந்த மின் மாற்றி்யில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட மின் தடையால் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் இருளில் தவித்தனர்.
தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் பார்வையிட்டதில் மின்னல் தாக்கியதால் பழுது ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் மருத்துவ கல்லூரிக்கு 22 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் செல்வதால் அனைத்து மெயின் சுவிட்சுகளையும் ஆப் செய்ய சொல்லியுள்ளனர். இந்நிலையில் மருத்துவ கல்லூரிக்கு தனியாக மின் பணியாளர் இல்லை என கூறப்படுகிறது.
ஜெனரேட்டர்கள்
தற்காலிகமாக இரவு பணியில் உள்ளவர்கள் எப்படி ஆப் செய்வது என தெரியாமல் திணறியுள்ளனர். உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் இணைப்பை துண்டிக்காமல் சரி செய்ய முடியாது என மின் வாரியத்தினர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற நேரங்களில் பயன் படுத்து வதற்காக மருத்துவ கல்லூரிக்கு அரசின் சார்பில் 4 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி திறக்கப் பட்டு ஒரு ஆண்டு முடிவடைந்து விட்ட நிலையில் அதனை பொதுப்பணித்துறையினர் முறையாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை என்பதால் கல்லூரி திறக்கப்பட்ட நாள் முதல் பயன் படுத்தாமல் உள்ளது. ஜெனரேட்டர் இருந்தும் இல்லாத நிலையில் இருளில் மூழ்கிய மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் கொசுக்கடியில் அவதிப்பட்டுள்ளனர்.
விடுதியில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்த எய்ம்ஸ் மாணவர்கள் நள்ளிரவில் கொசுக்கடி தாங்காமல் விடுதியை விட்டு வெளியே செல்வதாக கூறியுள்ளனர். இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் பேராசிரியர்கள் முதல்வர் உள்பட அனைவரும் தூக்கம் இழந்து வெளியே வளாகத்திற்கு வந்தனர். சிலர் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க காரில் அமர்ந்து கொண்டே இரவு பொழுதை கழித்துள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டில் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பருவ மழை
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 3 மாதங்களில் மட்டுமே பெய்யும் நிலை உள்ளது. வரும் 2 மாதங்கள் மழை காலம் என்பதால் இது போன்ற மின்தடை ஏற்படலாம் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களை முறையாக ஒப்படைத்து மாணவர்களை கொசுக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே வருங்கால மருத்துவர்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.