8 என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

வருகிற 30-ந்தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2023-12-24 18:10 GMT

கோப்புப்படம்

சென்னை,

மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 7 என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 8 கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 30-ந்தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் கல்லூரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில கல்லூரிகளை வெள்ள நீர் சூழ்ந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. பல மாணவர்களின் வீடுகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது என்று கல்லூரிகள் தெரிவித்துள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, அண்ணாபல்கலைக்கழக வ.உ.சி என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 7 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வி.வி.என்ஜினீயரிங் கல்லூரி என 8 கல்லூரி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதிவரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்