நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் மோதல் - 2 பேருக்கு மண்டை உடைந்தது

நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனா்.;

Update:2025-03-25 07:52 IST
நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் மோதல் - 2 பேருக்கு மண்டை உடைந்தது

நெல்லை,

நெல்லை பேட்டையில் அரசு ஐ.டி.ஐ. இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். கடந்த 21-ந் தேதி இந்த மாணவர்கள் இடையே நெல்லை சந்திப்பில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் உருவானது.

இந்த நிலையில் நேற்று ஐ.டி.ஐ.க்கு எதிரே உள்ள பேட்டை ரெயில் நிலையத்திற்கு இருதரப்பு மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று மோதிக் கொண்டனர். கற்கள், பெல்ட்டால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த மாணவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் விவகாரத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்