அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்
அரக்கோணத்தில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் 30-ந் தேதி நடக்கிறது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் ராணிபேட்டை மாவட்டத்தில் கோட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 30-ந் தேதி காலை 11.30 மணியளவில் அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு. கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண். கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதம் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
குறைகளை அனுப்பும் தபால் உறையின் முன்பக்க மேல் பகுதியில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2023 என்று குறிப்பிட்டு கி.சிவசங்கர், கோட்ட கண்காணிப்பாளர், அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரக்கோணம் கோட்டம் - 631001. என்ற முகவரிக்கு வருகிற 27-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.