தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

உடுமலையில் கிளை தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-03 11:38 GMT

தளி

உடுமலையில் கிளை தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட எரிப்பாளையம் வி.ஜி.ராவ் நகர் பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக கிளை தபால் நிலையம் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையம் திடீரென இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யலுமீனாட்சி நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில் தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஜி.ராவ் நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வி.ஜி.ராவ் நகரில் உள்ள கிளை தபால் நிலையத்தில் 2 ஆயிரம் பேர் நிரந்தரக் கணக்கும், 1300-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கும், 5 ஆயிரம் பேர் டெபாசிட்டும் செய்து உள்ளனர். மாதத்திற்கு சுமார் ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் நிலையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தபால் நிலையத்தில் ஓய்வு ஊதியர்கள், வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவு கணக்கு வைத்து உள்ளனர். இந்த சூழலில் 2 கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி உள்ளது. எனவே கிளை தபால் நிலையத்தை மீண்டும் அதே பகுதியில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து தலைமை தபால் அலுவலகத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பின்னர் காவல் துறை மற்றும் தபால் துறை அதிகாரிகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஜி.ராவ் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ஹக்கீம், ஏ.வி.எம்.தங்கமணி, கனகராஜ், மணியன் உள்ளிட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.இதனால் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்