இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் வாயில் கருப்புதுணி கட்டி போராட்டம்

Update: 2023-08-17 17:48 GMT


நல்லதங்காள் நீர்த்தேக்க அணை கட்ட நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணையை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி 4-வது நாளாக விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

வாயில் கறுப்பு துணி கட்டி

வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை

இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து கோனேரிபட்டி கிராமத்தில் நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதை பூஜை செய்து அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4-வது நாளான நேற்று விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வாயில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்