கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாப்பி ரக பூக்கள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பாப்பி ரக பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே பிரையண்ட் பூங்காவில் கோடை விழாவை முன்னிட்டு நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு மலர் செடிகளில் தற்போது பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இதில், குறிப்பாக பாப்பி ரக பூக்கள் மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த வகை பூக்கள் சூரியஒளி பட்டவுடன் மலரும் தன்மை கொண்டது. அதேபோல் சூரியன் அஸ்தமனம் ஆனதுடன் இந்த பூக்கள் மீண்டும் சுருங்கிக்கொள்ளும்.
இந்தநிலையில் பிரையண்ட் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாப்பி ரக பூக்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த பூக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் அந்த பூக்களை புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் பூக்களின் முன்பு நின்றபடி தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதுகுறித்து பூங்காவின் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், பிரையண்ட் பூங்காவில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பிரம்ம கமல பூக்கள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் பூத்த நிலையில், தற்போது மஞ்சள் நிறத்தில் பாப்பி ரக பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது. அத்துடன் பேன்சி மற்றும் அஸ்டமேரியா ஆகிய மலர்களும் பூத்துள்ளன. அடுத்த மாதம் (மே) மலர் கண்காட்சியின்போது பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கும் என்றார்.