பொங்கல் பண்டிகை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-14 15:55 GMT

சென்னை,

பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

விவசாயிகள் வாழ்வில் ஏற்றம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்திலும், அதனைத்தொடர்ந்து எனது ஆட்சி காலத்திலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன.

இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும் நிலவட்டும். இந்த பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாய மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டுவந்து சேர்க்கட்டும். இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பம் என்று, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் தூயவழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளப் பெருக்குடனும், உவகையுடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கேற்ப தினந்தோறும் செழிக்கட்டும் இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள். தினந்தோறும் செழிக்கட்டும் செல்வங்கள் என்று நெஞ்சார வாழ்த்தி தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

உழைப்பாளிகளுக்கும் கொண்டாட்டங்கள் தேவை என்பதை உலகிற்கு உணர்த்தும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலுமுள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். எல்லா நன்மைகளும் கிடைக்கட்டும்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:-

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். எனவே, தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, தனித்துவத்தை பாதுகாப்பதற்கு உரிய சூழல் வருகிற பொங்கல் புத்தாண்டில் நிச்சயம் தொடங்கும் என்று நம்புகிறோம். தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனங்கனிந்த பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்