டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா -துதிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கிய யானைகள்
டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா நடைபெற்றது. துதிக்கையை உயர்த்தி விநாயகரை யானைகள் வழிபட்டன.
பொள்ளாச்சி
டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா நடைபெற்றது. துதிக்கையை உயர்த்தி விநாயகரை யானைகள் வழிபட்டன.
யானை பொங்கல் விழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் யானை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
அதன்படி கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன. இதை தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிபட்டன.
இந்த விழாவிற்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் செல்வம் யானைகளுக்கு கரும்பு, பொங்கலை வழங்கினார். அப்போது வனச்சரகர்கள் சுந்தரவேல், புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை பாகன்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். யானைகள் முன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
3 யானைகன் கலந்துகொள்ளவில்லை
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கலீம், கபில்தேவ், முத்து ஆகிய யானைகள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த 3 யானைகளும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழாவில் யானைகளுக்கு ஆப்பிள், அன்னாச்சி பழம், கரும்பு, வாழைப்பழம், பொங்கல், ராகி உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினோம். முகாமில் கம்பீரமான தோற்றத்தை கொண்ட கலீம் யானைக்கு பட்டம் கட்டப்பட்டு, பாகன் குடைப்பிடித்தப்படி வரும். ஆனால் கலீம் இல்லாததால் பொங்கல் விழா எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லை. மேலும் வழக்கமாக வனத்துறை அலுவலகம் அருகில் யானை பொங்கல் நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முகாமில் நடத்தப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல் வனத்துறை அலுவலகம் அருகில் நடத்தினால் அனைத்து சுற்றுலா பயணிகளும் விழாவில் கலந்துகொள்ள முடியும் என்றனர்.