ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-08-25 18:41 GMT

பொங்கல் விழா

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் தரகம்பட்டி மந்தையைச் சேர்ந்த 24 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சார்பில், 5 ஆண்டிற்கு ஒருமுறை அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர். அதுபோல இந்த வருடம் பொங்கல் விழா நடத்த 24 ஊர் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அய்யர்மலை ரெத்தனகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி தரகம்பட்டி மந்தையைச் சேர்ந்த 24 ஊர்களில் இருந்து இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு வந்தனர். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே உள்ள இடங்களில் கற்களால் அடுப்பு உருவாக்கி, அதில் புதிய மண்பானை வைத்து பொங்கல் வைத்தனர்.

சுவாமிக்கு படையல்

இதன்பின்னர் நேற்று மாலை பூசாரி ஒருவர் பொங்கல் வைக்கப்பட்டிருந்த அனைத்து பானைகளில் இருந்தும் சூடான பொங்கலை கையில் ஒன்றாக சேகரித்தார். பின்னர் அந்த பொங்கல் இக்கோவில் வளாகத்தில் உள்ள சுவாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் அந்த பொங்கல் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டது.

விழாவில் இச்சமுதாயத்தை சேர்ந்த திரளானோர் வந்து தங்களது உறவினர்களுடன் கலந்து கொண்டனர். தாங்கள் வைத்த பொங்கலை உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். பக்தர்கள் பலர் மலைமேல் உள்ள ரெத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். பலர் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்