இன்று பொங்கல் பண்டிகை:கிருஷ்ணகிரியில் பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்கள்போலீசார் பாதுகாப்பு

Update: 2023-01-14 18:45 GMT

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று படுஜோராக நடைபெற்றது.

மஞ்சள் குலை, கரும்பு, பூஜை பொருட்கள், தேங்காய், காய்கறிகள், பொங்கல் பானைகள், பனைங்கிழங்கு, அடுப்புகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் வண்ண கோலப்பொடிகள், சாமந்தி பூக்கள் அடங்கிய மாலைகள், பூக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா, சேலம் சாலை, பெங்களூரு, சென்னை சாலைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் ஜவுளிக்கடைகளில் துணிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மாட்டு பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு தேவையான மூக்கணாங் கயிறுகள், மணிகள், வண்ண காகிதங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கிருஷ்ணகிரி நகரில் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

சுங்கச்சாவடி

பொங்கலை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பொங்கல் கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே புறப்பட்டனர். இதனால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

மேலும் பெங்களூரு, ஓசூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்று சென்றதை பார்க்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்