நிரம்பி வரும் கோவில் தெப்பக்குளங்கள்

அழகர் கோவில் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவில் தெப்பக்குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

Update: 2022-10-22 19:10 GMT

   அழகர்கோவில், 

அழகர் கோவில் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவில் தெப்பக்குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர் மழை

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அழகர்கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி ராஜகோபுரம் முன்புள்ள தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

இதற்கு அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்த கால்வாய், சோலைமலை முருகன் கோவில் நீரூற்று பகுதி மற்றும் அழகர் மலை அடிவார பகுதிகளில் வரக்கூடிய மழை நீர், அதற்கான சிற்றோடைகளில் ஒன்றாக இணைந்து கருப்பணசாமி கோவில் முன்புள்ள தெப்பக்குளத்தில் மழை தண்ணீர் நிரம்பி வருகிறது.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

அத்துடன் இந்த குளம் நிரம்புவதை கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் இக்கோவிலின் நிர்வாகத்திற்குட்பட்ட பொய்கை கரைபட்டி தெப்பக்குளமும் நிரம்பி வருகிறது. இதையும் அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அழகர் மலையிலிருந்து வரக்கூடிய மழை தண்ணீரை ஒருங்கிணைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்