காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் முழு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து கலெக்டர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கதர் விற்பனை அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் முழு உருவ சிலைக்கு காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழ்நாடு வாணிப பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தே.மு.தி.க.வினர் மது இல்லா தமிழகம் வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு இல்லா தமிழகம் வேண்டும் என்கிற பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர். இதேபோல் 48-வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.