போலீசார் நல்வாழ்வு பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் போலீசார் நல்வாழ்வு பயிற்சி முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-04 17:22 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ்காரர் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான 45 பேருக்கு போலீசார் நல்வாழ்வு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடக்கிறது. இந்த பயிற்சி முகாமை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனிதனின் வாழ்க்கை பயணத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரக்கூடியது. அதை சரிசமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து தவறான வழிகளில் செல்லாமல், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அனுபவங்களே உங்களை சிறந்தவர்களாக மாற்றும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த அளவில் பிறருக்கு நன்மைகள் செய்யுங்கள். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி உங்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் ஆரோக்கியமானதாகும். நீங்கள் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்களாக உங்களை மாற்றிக் கொள்ள இந்த பயிற்சியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த காவல் பணி மக்களுக்கு சேவை செய்வதற்காக நமக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக கருதவேண்டும். அதே சமயம் நம்மையும், நமது குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த நல்வாழ்வு பயற்சியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மனநல டாக்டர் சிவசைலம், சமூக ஆர்வலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தையும், நல்வாழ்வு வாழ்வதற்கான ஆலோசனைகளையும் கூறி போலீசாருக்கு பயிற்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தூத்துக்குடி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்