கஞ்சா, சாராயம் விற்பதை தடுக்க போலீசார் சோதனை

திருவண்ணாமலை நகரில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா, சாராயம், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-15 18:42 GMT

திருவண்ணாமலை நகரில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா, சாராயம், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திடீர் சோதனை

திருவண்ணாமலை நகர பகுதியில் கஞ்சா, சாராயம், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்கும் வகையில் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை பே கோபுரத் தெரு, சமுத்திரம் காலம், கல் நகர் ஆகிய பகுதிகளில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த நபர்கள் பிடிக்கப்பட்டனர்.

இதில் சாராய வழக்கில் ஆனந்தி (வயது 55), சாந்தலா (32), விஜயா (43), மகேஷ்வரி (55), அம்மு (40) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா வைத்திருந்த கிரிவலப்பாதையில் உள்ள சாமியார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அய்யனார் (43) என்பவரையும் கைது செய்தனர். மேலும் குற்றப்பின்னணி கொண்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருவண்ணாமலை உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து கண்காணிப்பு

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, சாராயம் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழுவினர் நகர பகுதியில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் கைரேகை எடுக்கப்பட்டு அவர்கள் மீது குற்றப் பின்னணி ஏதேனும் உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகப்படும் வகையில் இருந்த 17 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 50 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை நகர பகுதியில் கஞ்சாவை ஒழிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கிரிவலப் பாதையில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரோந்து மோட்டார் சைக்கிள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்