ராமநத்தம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் நகை அபேஸ் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ராமநத்தம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி அமுதமொழி (வயது 29). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது பெற்றோர் ஊரான தி.ஏந்தல் கிராமத்திற்கு வந்திருந்தார்.
நேற்று மதியம் இவருடைய பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் அமுதமொழி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், விளக்கிற்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதையடுத்து அமுதமொழி, வீட்டில் இருந்த பித்தளை விளக்கை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த விளக்கை அவர்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு பாலீஷ் செய்து அமுதமொழியிடம் கொடுத்துள்ளனர்.
8 பவுன் நகை
இதைத்தொடர்ந்து நீங்கள் அணிந்திருக்கும் நகை அழுக்காக உள்ளது, அதை கொடுத்தால் விளக்கை பாலீஷ் செய்தது போல் அந்த நகையையும் பாலீஷ் போட்டு தருவதாக அவரிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அமுதமொழி, தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை கழற்றி, அந்த நபர்களிடம் கொடுத்தார்.
அதை வாங்கிய அந்த நபர்கள், பாத்திரத்தில் போட்டு விட்டு வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அமுதமொழி வெந்நீர் வைத்து எடுத்து வர வீட்டிற்குள் சென்றார். அப்போது அவர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் நகையுடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இதற்கிடையே வெந்நீர் எடுத்து வந்த அமுதமொழி, அவர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினருடன் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்போது தான், பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகையை அபேஸ் செய்திருப்பது அமுதமொழிக்கு தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவர் இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு நகையை அபேஸ் செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.