7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை
மன்னார்குடி பகுதியில் உள்ள 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.
மன்னார்குடி:
நெல் கொள்முதல்
மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி முடிந்து குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஏதும் நடைபெறுகிறதா?, இடைத்தரகர்கள் தொல்லை இருக்கிறதா? என்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆய்வு மேற்காள்ள அறிவுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
அதன்படி, மன்னார்குடியை அடுத்த மூவாநல்லூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்படும் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா?, வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா?, நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பணம் ஏதும் பெறப்படுகிறதா?, கொள்முதல் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.