போலீஸ் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்சினை

உடுமலை கச்சேரி வீதி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்சினை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-01-27 17:51 GMT


உடுமலை கச்சேரி வீதி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்சினை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

பராமரிப்பு இல்லை

உடுமலை நகர் கச்சேரி வீதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே போலீஸ் குடியிருப்பும் உள்ளது. இங்கு 4 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதியில் பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படாமல உள்ளது. குறிப்பாக குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருந்து வெளிசுவர் வழியாக செல்லும் குளியல் அறை மற்றும் கழிவறை குழாய்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதனால் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து அதிலிருந்து கழிவு நீர் வெளியே பாய்ந்து கொண்டிருக்கிறது. இது கவனிப்பாரின்றி விடப்பட்டுள்ளதால் குடியிருப்பில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதேபோன்று கழிவறை தொட்டியும் சில இடங்களில் நிரம்பி வழிகிறது.

சுகாதார சீர்கேடு

இவ்வாறு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கழிவறை கழிவுநீர் வீடுகளை சுற்றி நாட்கணக்கில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் நெருக்கமாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இங்கு குடியிருந்து வருவோர் அச்சத்தில் உள்ளனர்.

இதேபோன்று கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முகப்பு பகுதியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே, இங்கு கால்வாயை தூர்வாரவும், குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த குழாய்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்